New Delhi:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மாணவர்களை தனி இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க டெல்லி அருகேயுள்ள மானேசரில் ராணுவம் தரப்பில் பிரமாண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து சுமார் 300 மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை 2 வாரத்திற்கு தங்க வைத்து, நிலைமை கண்காணிக்கப்படும். இதற்காக தனி மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய மாணவர்கள் வரும்போது, விமான நிலையத்தில் விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், ராணுவ மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு பரிசோதனையில் ஈடுபடும். அதில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பவர்கள், ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
பரிசோதனையின்போது மாணவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்.
முதல் வகையில் அறிகுறி இருப்பதாக கருதப்படும் மாணவர்கள். அதாவது காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்தால் அவர்கள் நேரடியாக ராணுவ மருத்துவ முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்.
இரண்டாவது வகையில், உன்னிப்பாக கவனிக்க கூடிய மாணவர்கள். அதாவது, இந்த மாணவர்களுக்கு அறிகுறிகள் இருக்காது ஆனால், கடல் உணவு மற்றும் இறைச்சிக் கடைக்கு அவர்கள் முன்பு சென்றிருக்கலாம். இவர்கள் இரண்டாம் வகையினர். ஏனென்றால், உஹானில் உள்ள கடல் உணவு மார்க்கெட்டில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் புகுந்து 14 நாட்களில்தான் தனது வேலையை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.